Saturday, May 17, 2008

மியூச்சுவல் ஃபண்ட் கேள்வி - பதில், நாணயம் விகடன்

''எனக்கு வயது 35. நான் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க விரும்புகிறேன். எஸ்.ஐ.பி. முறையைக் கையாண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொண்டால், நான் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்?''

''கோடீஸ்வரர் ஆக நினைக்கும் உங்கள் எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் மாதம் ஒன்றுக்கு 38,500 ரூபாய் முதலீடு செய்வதாகவும், அந்த முதலீடு ஆண்டுக்கு 15% வருமானம் கொடுப்பதாகவும் கொண்டால், 10 வருடத்தில் அந்தத் தொகை ஒரு கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். இது ஓர் உத்தேச மதிப்பீடுதான். முன்பின்னாக மாறவும் செய்யலாம். உங்களுடைய சேமிப்பு போர்ட்ஃபோலியோவை, சிறப்பாகச் செயல்பட்டு வரும் டைவர்சிஃபைட் ஃபண்ட் திட்டங்களுக்கு 65%, மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளுக்கு 25% செக்டோரல் ஃபண்டுகளுக்கு 10% எனப் பிரித்துக்கொள்ளலாம்.''

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தேன். தற்போது அந்தத் திட்டத்தில் இருந்து வெளியேறினால் எனக்கு கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் உண்டா? உண்டு என்றால் எத்தனை சதவிகிதம்?

''நீங்கள் முதலீடு செய்து இன்னும் ஓராண்டு முடியவில்லை என்பதால் உங்கள் முதலீட்டுக்கு கேப்-பிட்டல் கெயின் டேக்ஸ் உண்டு. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் இந்த டேக்ஸின் சதவிகிதம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 10 சதவிகிதமாக இருந்த இது, இந்த வருடம் 15 சதவிகி-தமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் 10 சதவிகிதமாக இருக்கும்போது நீங்கள் முதலீடு செய்திருந்தாலும், முதலீட்டில் இருந்து வெளியேறும்போது உள்ள விதிமுறைகளைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். எனவே உங்கள் முதலீட்டில் இருந்து வரும் லாபத்துக்கு 15% கேப்பிட்டல் கெயின் டேக்ஸ் உண்டு. இது எஸ்.ஐ.பி. முறை முதலீட்டுக்கும் பொருந்தும்.''

தற்போது சந்தை உள்ள நிலையில், எந்த செக்டோரல் ஃபண்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்?

''செக்டோரல் ஃபண்ட் முதலீடு என்பது டைவர்சிஃபைட் ஃபண்ட் முதலீட்டைக் காட்டிலும் அதிக ரிஸ்க் கொண்டது. உங்களுடைய வயதைப் பொறுத்து, 20-லிருந்து 25 சதவிகிதத்தை செக்டோரல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனங்கள், மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள செக்டோரல் ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது சந்தை ஏற்றத்-தாழ்வுகளோடு இருப்பதால், கையில் உள்ள பணம் முழுவதையும் முதலீடு செய்யவேண்டாம். சந்தையின் ஏற்றத்தைப் பொறுத்து கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை மேற்கொள்வதுதான் சரியான வழி.''

சில மார்க்கெட்டிங் நிறுவனங்கள், 50% டிவிடெண்ட் தரப்போவதாகச் சொல்லி, சில மியூச்சுவல் ஃபண்டுகளை வாங்குவதற்கு ஆசை காட்டுகின்றன. பொதுவாக டிவிடெண்ட் கொடுக்கும் சமயத்தில் முதலீடு செய்வது லாபமானதாக இருக்குமா?

அப்படி பிரத்தியேகமான லாபம் எதுவும் இல்லை. ஓப்பன் எண்டட் திட்டங்களில் டிவிடெண்ட் கொடுக்கப்படும்போது, அதனுடைய என்.ஏ.வி. மதிப்பு குறைந்துவிடும். இதனால், நீங்கள் முதலீடு செய்த தொகையின் மொத்த மதிப்பும், வைத்திருக்கும் யூனிட்டின் மதிப்பும் குறையும். மொத்தமாகப் பார்த்தால் லாபம் என்று எதுவும் இருக்காது. டிவிடெண்ட் என்பது உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை எடுத்து உங்களுக்குக் கொடுப்பது போலதான். முதலீட்டுக்காலத்தில் இடையிடையே பணம் தேவைப்-படுபவர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும். அதேநேரத்தில் நீண்ட-கால அடிப்படையில் குரோத் ஆப்ஷன்தான் லாபகரமானது.

மியூச்சுவல் ஃபண்ட் வருமானத்தை அப்சல்யூட் ரிட்டர்ன், ஆனுவலைஸ்டு ரிட்டர்ன் என்று இரண்டு விதமாகப் பிரிக்கிறார்களே, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஒருவர், தன் பணத்தை முதலீடு செய்ததற்கும், அதை வெளியே எடுப்பதற்கும் இடையேயான மொத்த முதலீட்டுக் காலத்தில் அது எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதைக் கணக்கிடுவதுதான் அப்சல்யூட் ரிட்டர்ன். ஆனுவலைஸ்டு ரிட்டர்ன் என்பது, ஒவ்வொரு வருடமும் உங்கள் முதலீடு எந்தளவுக்கு வரு-மானத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைக் கணக்கிடுவது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்-பவர்கள், ஆனுவலைஸ்டு ரிட்டர்னை கணக்கில் எடுத்துக்-கொண்டுதான் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நான் வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். ஆனால், என்னிடம் பான் கார்டு இல்லை. இங்கிருந்தே பான் கார்டு வாங்க முடியுமா? அதற்கான நடைமுறை என்ன? விண்ணப்பித்தால் எவ்வளவு காலம் ஆகும்?

வெளிநாடுகளில் இருந்துகொண்டே இந்தியாவில் பான் கார்டு வாங்கமுடியும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம், அல்லது விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து பூர்த்தி செய்து தபால் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்பவேண்டிய முகவரி, Income Tax PAN Services Unit, National Securities Depository Limited, 1st floor,Times Tower, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel (W), Mumbai - 400013, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி https://tin.tin.nsdl.com/pan/index.html

டேக்ஸ் சேவிங்க ஃபண்ட் முதலீட்டை இப்போதிருந்தே ஆரம்பிப்பது நல்லதா, அல்லது நிதி ஆண்டு முடிவு வரை காத்திருக்கலமா?
வரி சேமிப்பு முதலீட்டை இப்போதிலிருந்து ஆரம்பிப்பதுதான் சரியான முறை. மாதா மாதம் ஒரு தொகையை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யும்போது, பங்குச்சந்ந்தையின் ஏற்றத் தாழ்வுகளைப் பொறுத்து நிறைய யூனிட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நித் ஆண்டின் முடிவில் சந்தை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஒருவேளை சந்தை உச்சத்தில் இருந்தால் உங்கள் முதலீட்டுக்கு குறைவான் யூனிட்டுகளே கிடைக்கும். மேலும், ஆரம்பத்தில் இருந்தே முதலீடு செய்தால் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானமும் கிடைத்திருக்கும்.

''கடந்த ஓராண்டு காலமாக எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 1,000 ரூபாய் வீதம் முதலீடு செய்துவருகிறேன். தற்போது என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளதால், என் முதலீட்டின் அளவை உயர்த்தலாம் என எண்ணுகிறேன். கூடுதல் தொகையையும் முந்தைய திட்டத்திலேயே முதலீடு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா..?''

''ஒரு நிறுவனத்தின் எஸ்.ஐ.பி. திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் கட்டி வருகிறீர்கள் என்றால், திடீரென்று அந்தத் தொகையைக் கூட்டுவதற்கு வாய்ப்பில்லை. கூடுதலாக செலுத்த விரும்பும் தொகையை அதே திட்டத்தில் புதிய முதலீடாகத்தான் செய்யவேண்டும்.''


''வங்கிப் பங்குகளின் விலை இறங்கி இருக்கிறது. இந்தச் சமயத்தில் வங்கித் துறையில் கவனம் செலுத்தும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா?''

''பேங்க்கிங் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது சரியான தருணம்தான்! பங்குச் சந்தை ஏற்றத்-தாழ்வுகளோடு இருக்கும் சமயத்தில், சிறிது சிறிதாக இந்த செக்டார் ஃபண்டில் தாழ்வுநிலையின்போது முதலீடு செய்யலாம். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, வங்கித்துறை லாபகரமானது என்பதால், இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம்.''

''என் வயது 35. மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்போதிருந்தே ஓய்வுக்காலத்துக்கு என தனியே ஒரு தொகை ஒதுக்குவதாக இருந்தால், அதை எந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது நல்லது?''

''பென்ஷனுக்கு ஒதுக்கத் திட்டமிட்டிருக்கும் தொகையை ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி. முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய-லாம். இவ்வாறு செய்யும்போது, டைவர்சிஃபைட் திட்டங்-களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இந்த வகையில் தற்-போது கோட்டக் 30, சுந்தரம் செலக்ட் ஃபோக்கஸ், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ரிலையன்ஸ் குரோத் போன்ற பல திட்டங்கள் சந்தையில் உள்ளன.''

''மியூச்சுவல் ஃபண்டில் ஒருமுறை முதலீடு செய்பவர்களுக்கு ஒரேமுறைதான் ஸ்டேட்மென்ட் அனுப்புவார்களா, அல்லது ஒவ்வொரு வருடமும் அனுப்புவார்களா?''

''ஒருமுறைதான் அனுப்புவார்கள். அதன்பின் உங்களுக்கு எப்போது ஸ்டேட்மென்ட் தேவைப்படுகிறதோ, அப்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு ஃபோலியோ நம்பரைச் சொன்னால் மீண்டும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அதுபோக, பொதுவாக வருடத்துக்கு ஒருமுறை நீங்கள் முதலீடு செய்திருக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், நியூஸ் லெட்டர், வருடாந்திர ரிப்போர்ட்டுகள் மற்றும் பிற முக்கியத் தகவல்களை அனுப்பி வைப்பார்கள்.''

நன்றி: நாணயம் விகடன்

No comments: