Saturday, October 20, 2007

பரஸ்பரநிதி? இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் வரலாறு.

நன்றி: குமுதம்.காம்

இந்தியாவில் பங்குச்சந்தை தொடங்கியது 1875_ல்! ஆனால் இந்திய அரசு இதற்கு, சட்டப் பூர்வமான அங்கீகாரம் கொடுத்து முறைப்படுத்தியது, 1965_ல்தான். எனினும் பங்குச்சந்தை முதலீட்டின் இன்னொரு வடிவான மியூச்சுவல் ஃபண்ட் 1963_லேயே முளைவிடத் தொடங்கி விட்டது. இந்திய அரசின் முன் முயற்சியால்தான் இது தொடங்கப்பட்டது. அப்போது, இதற்காக 'யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (யூ.டி.ஐ)' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மத்திய அரசின் ஆசிர்வாதத்தோடு, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கிய இந்த அமைப்புக்கு, பாராளுமன்றத்தில் சட்டமியற்றி, தனி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கி தவிர, வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை என்ற சிறப்புச் சலுகை பெற்ற இந்த யூ.டி.ஐ., 1964_ல் தனது முதல் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து பணம் திரட்டியது.

10 ரூபாய் மதிப்பு கொண்ட தனித்தனி யூனிட்களாக வழங்கி, முதலீடு திரட்டிய இந்தத் திட்டம் _ அறிமுகமான ஆண்டின் பெயரிலேயே 'யூனிட் ஸ்கீம் 64' என பெயரிடப்பட்டது. சுருக்கமாக யூ.எஸ்.64! யூ.டி.ஐ. நிறுவனத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல் சில ஆண்டுகளுக்கு முன் வெளியுலகுக்கு வந்தது. இதனால் இந்நிறுவனம் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததுடன், யூ.எஸ்.64 யூனிட்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டது. இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவானது.

அதற்கு சில ஆண்டுகள் முன்புவரை யூ.டி.ஐ. ஒரு கோயில் மாடு! ரொம்பப் புனிதமான இமேஜ். யாரும் எளிதில் விமர்சனம் செய்யத் துணிவதில்லை. அதேபோல, லாபகரமாகவும் இருந்து, பணம் போட்டவர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வந்தது என்பது வேறு கதை.

இப்படி மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு பிள்ளையார் சுழி போட்டு, இந்தியாவில் அதைத் தொடங்கி வைத்த யூ.டி.ஐ., 1978_ல் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது. 'இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா' என்ற பெயரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இன்னொரு நிதி நிறுவனம் யூ.டி.ஐ.யை தத்து எடுத்துக் கொண்டது. 1987 வரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் யூ.டி.ஐ.தான் தனிக்காட்டு ராஜா! மருந்துக்குக் கூட, எதிர்க்கடை கிடையாது. அந்த நேரத்தில் யூ.டி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பணம் கிட்டத்தட்ட 6700 கோடி!

இந்தப் போக்கில் மாற்றம், 1987_ல் தொடங்கியது. இந்திய பொதுத்துறை வங்கிகளும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் கூட மியூச்சுவல் ஃபண்ட் தொடங்குவதில் ஆர்வம் காட்டினர். அந்த ஆண்டு ஜூன் மாதம் 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' தனது மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கியது. எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் என்ற பெயரில், இது தொடங்கிய ஆறே மாதத்தில், அதாவது டிசம்பரில் கனரா பேங்க் 'கேன் பேங்க்' மியூச்சுவல் ஃபண்ட்' என்ற பெயரில் தனது இளவலை களத்தில் இறக்கியது. இப்படித் தொடங்கிய வளர்ச்சி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் மிக முக்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி., தன் பங்குக்கு துண்டு போட்டு இடம் பிடித்தது, 1989 ஜூனில்! அடுத்து பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மியூச்சுவல் ஃபண்ட், 1989 ஆகஸ்டில்... இந்தியன் பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் நவம்பரில்... பேங்க் ஆஃப் இந்தியா ஜூன் 1990ல்...

உயிர்காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்கு கொள்ளும்போது, தானும் களமிறங்கினால் என்ன என்று எண்ணியதோ என்னவோ! ஜி.ஐ.சி. என குறிப்பிடப்படும், உடமைகளுக்கான காப்பீட்டுத் துறையில் இயங்கி வந்த 'ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்' எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனமும் அந்த ஆண்டு டிசம்பரில் தனது மியூச்சுவல் ஃபண்டைத் தொடங்கியது. ஒரே நேரத்தில், பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தனியாளாய் பயணித்துக் கொண்டிருந்த யூ.டி.ஐ., இப்போது கடுமையான போட்டியைச் சந்தித்தாக வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த நேரத்தில் பேங்க் ஆஃப் பரோடா தனது மியூச்சுவல் ஃபண்டை அக்டோபர் 1992_ல் தொடங்கியது. அடுத்த ஓராண்டில் எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் சேர்ந்து சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு திரட்டியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதார கொள்கைகளில் மாற்றங்கள் தொடங்கியிருந்தன. பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கின் மேற்பார்வையில் புதிய மாற்றங்கள் தலையெடுக்கத் தொடங்கியிருந்தது. மற்ற பல வளர்ந்த நாடுகளில் இருப்பதுபோலவே இந்தியாவிலும் தனியாரின் கட்டுப்பாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல விஷயங்களும் தொடங்க ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது.

இதன் பலனாய், மூன்றாவது கட்ட வளர்ச்சி! பொதுத்துறை வங்கிகளும், அரசு சார்ந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் அதிகாரம் செய்து வந்த துறையில், ஸ்மார்ட்டாக 'டை' கட்டிக் கொண்டு மற்றவர்களும் கால் வைக்கத் தொடங்கினார்கள்.

கதவை அகலமாகத் திறந்துவிடுவது என்றானதும், யார் வேண்டுமானாலும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, சில கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டியிருந்தது. அதனால் அப்போது பங்கு முதலீட்டு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வந்த செபியின் மூலம் புதிய வரவுகளுக்கு சில வரையறைகள் விதிக்கப்பட்டன. எல்லாரும் இந்த அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து கொண்டு அதன்பிறகுதான் பணியைத் தொடங்க அனுமதிக்கப்பட்டார்கள். யூ.டி.ஐ. தவிர, இந்தத் துறையில் ஏற்கெனவே இயங்கி வந்தவர்களும் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி பதிவு செய்து கொண்ட முதல் தனியார் துறை மியூச்சுவல் ஃபண்ட் சென்னையில் இருந்து இயங்கிய 'கோத்தாரி பைனியர் மியூச்சுவல் ஃபண்ட்'தான். 1993 ஜூனில் இது பதிவு பெற்றது. அதையடுத்து இன்னும் நிறைய ஃபண்ட்கள் பதிவு பெற்றன. முதலீடு திரட்டின. ஆனால் தனியார் துறை காலெடுத்து வைத்த கொஞ்ச காலத்திலேயே நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மணியடித்தது.

மார்கன் ஸ்டான்லி என்ற பெயரில் தொடங்கிய ஒரு வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட் தனது முதல் வெளியீடு மூலம் பணம் திரட்டியபோது, அதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சில இடங்களில் விண்ணப்பங்கள் கூட கிடைக்கவில்லை. அதனால் விண்ணப்பம் கிடைத்தவர்கள் பலரும் அதில் கூடுதலாக பணத்தைப் போடத் தொடங்கினர். இறுதி நாளுக்குப் பிறகு கணக்குப் பார்த்தால் _ மார்கன் ஸ்டான்லி எதிர்பார்த்ததுபோல, பல மடங்குப் பணம் திரண்டிருந்தது. ஆனால் துரதிருஷ்டம் அந்த யூனிட் விற்பனைக்கு வந்தபோது அதன் மதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தது. அதீத ஆர்வம்... எதிர்பார்ப்போடு முதலீடு செய்த பலரும் ஆடிப் போனார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விட, 'தனியார் துறை இங்கே சாதனைகள் நிகழ்த்தும்' என்று வீராப்புப் பேசிய பலரது வாயை அடக்க நடந்த சம்பவம் போல இது அமைந்தது. அதன்பிறகு இந்தத் துறையில் கால் பதித்த இன்னும் பல நிறுவனங்கள் குறித்து கண்மூடித்தனமான நம்பிக்கைகள் வைப்பதில் அர்த்தம் இல்லை என்பது உறுதியானது.

அதேபோல, சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த செபியும் தனது முந்தைய வரையறைகளைத் திருத்தி, 1996_ல் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தது. அதன்பின் இன்னும் பல வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களும் இந்தியாவில் கடை திறக்கத் தொடங்கினார்கள். இன்னொரு புறம் ஏற்கெனவே இங்கே கடை விரித்திருந்த பலரும் இனி தொடர்ந்து தனியாக இயங்குவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து தங்களது நிறுவனங்களை மொத்தமாக மற்றவர்களுக்கு விற்பது... அல்லது அவர்களுடன் இணைந்து செயல்படுவது... என தங்களது பாதையை மாற்றியமைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களாகவே முன்வந்து தங்களது போக்கை... திட்டத்தை மாற்றியமைத்துக் கொண்டது போல, மாற்றியமைத்தே ஆக வேண்டும் என்ற பரிதாப நிலையை யூ.டி.ஐ. எட்டியிருந்தது. அப்போது அதன் யூ.எஸ்.64 போன்ற சில யூனிட்களின் மதிப்பை செயற்கையாக தூக்கி வைத்திருந்தது. இதனால், யூ.எஸ்.64ன் மதிப்பு அதன் மதிப்பு குறைந்திருந்தபோதும், தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி அதை பாதாளத்துக்குத் தள்ளிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால் யூ.டி.ஐ.யின் வேர்கள் செல்லரித்துப் போய் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.

அந்த வகையில், ரொம்பவே ஆடி அடங்கியபின் 2003 ஜனவரியில் இந்தத் துறையில் மொத்தம் 33 மியூச்சுவல் ஃபண்ட்கள் இருந்தன. அவை மூலம் திரட்டப்பட்டிருந்த மொத்த பணத்தின் அன்றைய மதிப்பு 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்! இது தவிர யூ.டி.ஐ. மட்டும் தனியாக சுமார் 44 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் யுனியட்களை விற்றிருந்தது.

2003 பிப்ரவரியில் இந்தத் துறையின் அடுத்த முக்கிய நடப்பு தொடங்கியது. அதாவது, இந்தியா இத்துறையின் முதல் நிறுவனமான, 1963_ல் தொடங்கிய யூ.டி.ஐ.க்கு அப்போது தரப்பட்ட சிறப்பு அந்தஸ்து வாபஸ் ஆனது. இதற்காக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் திரும்பப் பெறப்பட்டது. அத்துடன் அந்த நிறுவனம் அன்று கண்டிருந்த கணிசமான நஷ்டத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருந்தது. எனவே இனி எந்த ஒரு தனி நிறுவனத்துக்கும் எவ்விதத்திலும் சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து, இனி யூ.டி.ஐ.யையும் மற்ற நிறுவனங்கள் போலவே சமமான அந்தஸ்தில் வைக்க முடிவு செய்தனர். அதனால் யூ.டி.ஐ. இரண்டு அமைப்புகளாக பிரிக்கப்பட்டது. முதலாவது அமைப்பை, பழைய அதே பெயரில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்று குறிப்பிட்டார்கள். யூ.எஸ்.64 மற்றும், அதுபோல் 'உறுதியான வருவாய்க்கு உத்திரவாதம்' தரப்பட்ட ஒரு சில திட்டங்கள் மட்டும் இதன் கீழ் ஒதுக்கப்பட்டது. ஜனவரி 2003 கணக்குப்படி 29835 கோடி மதிப்பிலான யூனிட் திட்டங்கள் இதன் கீழ் இருக்கும் என பிரிக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட இன்னொரு அமைப்பிற்கு 'யூடிஐ மியூச்சுவல் ஃபண்ட்' என்று பெயரிட்டார்கள். மற்ற மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு செபி குறிப்பிடும் வரையறைகள் அனைத்தும் இந்தப் புதிய அமைப்புக்கும் பொருந்தும் என்றும் முடிவானது. அத்துடன் 2000_ம் ஆண்டின் மார்ச் மாத கணக்குப்படி 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இந்தப் புதிய அமைப்பின் கீழ் வரும் என்று முடிவு செய்யப்பட்டது. இது மத்திய அரசின் நடவடிக்கைப்படியானது. ஆனால் புதிதாகத் தொடங்கிய சில தனியார் மியூச்சுவல் ஃபண்ட்களிலும் பிரச்னைகள் தலையெடுத்ததால் அங்கும் ஒரு அதிர்வுக்குப் பிறகு தரை நிரவப்பட்டதில், செப்டம்பர் 2004 இறுதியில் இந்தியாவில் மொத்தம் 29 மியூச்சுவல் ஃபண்ட்கள்தான் என்ற நிலை உருவானது. அவை வழங்கிய 421 திட்டங்களின் கீழ் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடிக்கும் சற்று கூடுதலான மதிப்பில் யூனிட்கள் விற்பனையாகி இருந்தன. இது, மார்ச் 2006 இறுதியில் 37 பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் எனவும் அவற்றின் மூலம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 862 கோடி ரூபாய் மதிப்புக்கு யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்ற நிலைக்கும் மாறியுள்ளது.

இந்தியாவில் பதிவு பெற்று செயல்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்கள்:

1. ஏ.பி.என். அம்ரோ மியூச்சுவல் ஃபண்ட்

(2. அல்லயன்ஸ் கேப்பிடல் மியூச்சுவல் ஃபண்ட். 2005 செப்டம்பர் மாதத்தில் இது பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின)

3. பென்ச்மார்க் மியூச்சுவல் ஃபண்ட்

4. பிர்லா சன்லைப் மியூச்சுவல் ஃபண்ட்

5. பி.ஓ.பி. மியூச்சுவல் ஃபண்ட்

6. கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட்

7. டி.பிஎஸ் சோழா மியூச்சுவல் ஃபண்ட்

8. டச் மியூச்சுவல் ஃபண்ட்

9. டிஎஸ்பி மெரில்லின்ச் மியூச்சுவல் ஃபண்ட்

10. எஸ்கார்ட்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

11. ஃபிடிலிட்டி மியூச்சுவல் ஃபண்ட்

12. ஃபிரங்கிளின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட்

13. ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்

(14. ஜிஐசி மியூச்சுவல் ஃபண்ட். 2005 அக்டோபர் மாதத்தில் இது கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின)

15. ஹெச்எஸ்பிசி மியூச்சுவல் ஃபண்ட்

(16.ஐஎல்-எஃப்எஸ் மியூச்சுவல் ஃபண்ட். 2004 ஜூலை மாதத்தில் இது யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. இதன் திட்டங்கள் பெயர் மாறின.)

17. இந்த் வைஸ்யா மியூச்சுவல் ஃபண்ட்

18. ஜே.எம் ஃபைனான்ஸியல் மியூச்சுவல் ஃபண்ட்

19. கோடக் மஹேந்திரா மியூச்சுவல் ஃபண்ட்

20.எல் .ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட்

21. லோட்டஸ் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்

22. மார்கன் ஸ்டான்லி மியூச்சுவல் ஃபண்ட்

(23. பிஎன்பி மியூச்சுவல் ஃபண்ட். 2004 ஏப்ரல் மாதத்தில் இது பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன மடியில் வீழ்ந்தது. இதன் திட்டங்கள் புதிய பெயரைப் பெற்றன)

24. பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட்

25. ப்ரொட்ன்ஷியல் ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட்

26. குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட்

27. ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்

28. சஹாரா மியூச்சுவல் ஃபண்ட்

29. எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்

30. ஸ்டாண்டர்ட் சார்டட் மியூச்சுவல் ஃபண்ட்

(31. சன் எஃப் - சி மியூச்சுவல் ஃபண்ட். 2004 மே மாதத்தில் இது பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கைக்கு மாறியது. இதன் திட்டங்கள் புதிய நாமகரணம் பெற்றன)

32. சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட்

33. டாடா மியூச்சுவல் ஃபண்ட்

34. டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட்


35. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்

(36. ஸூரிச் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட். 2003 ஜூனில் இதை ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் வாங்கிவிட்டது. ஏற்கெனவே இருந்த திட்டங்கள் புதிய பெயருக்கு மாறிக் கொண்டன)

முதலீடு என்றவுடன் எடுத்த எடுப்பிலேயே கன்னாபின்னா லாபமெல்லாம் தேவையில்லை! கிடைப்பது கொஞ்சமாக இருந்தாலும், நான் போடும் ஆரம்ப முதலே..., 'ஆடி காற்றில் அடிச்சுட்டு போச்சு!' என்பது போல மொத்த முதலுக்கும் பங்கம் வராமல் இருந்தால் சரி!'' என்று சொல்லும் நபர்களுக்கான ஒரு முதலீட்டு... சேமிப்பு திட்டம் தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் பலரிடம் பரவலாக்கப்படுவதால், தனியொருவர் சந்திக்க நேரும் ரிஸ்க் இதில் குறைகிறது. அவ்வளவு தான்.

அதாவது, நாம் மேலே சொன்னது மாதிரியான நபர்கள் பலர் சேர்ந்து, அவர்களால் முடிந்த தொகையை மொத்தமாக திரட்டி, அந்த தொகையை பங்குசந்தை பற்றி விபரம் தெரிந்த நிபுணர்களிடம் கொடுத்து, அவர்கள் மூலமாக பங்குகளில் முதலீடு செய்வது. அதே போல, சரியான நேரம் பார்த்து நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் அந்த பங்குகளை விற்றுவிடுவது. இப்படியான தொடர் நடிவடிக்கைகளில் இடையில் கிடைத்த மொத்த லாபத்தையும் சேர்த்து, ஆரம்ப முதலீடு போட்ட அத்தனை நபர்களும் பகிர்ந்து கொள்வது. இது தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில், யார் எவ்வளவு பணம் போட்டார்களே, அந்த அளவுக்கு அவர்களுக்கு லாபம் உறுதியாகிறது. ஒரு வேளை இந்த பணத்தில் வாங்கிய எதாவது ஒரு பங்கில் சிக்கல் ஏற்பட்டு அது விலை குறைய நேர்ந்தால், அதனால் ஏற்படும் மொத்த நஷ்டமும் அந்த திட்டத்தில் முதலீடு செய்த எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் தனியொருவர் சந்திக்க வாய்ப்புள்ள பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது.

இந்த மாதிரி திட்டத்தின் சாதக அம்சம் இது மட்டுமல்ல: இன்னும் பலவகையான லாபங்களும் உண்டு. ஒரு சிறு முதலீட்டாளர் தனியாளாக முதலீடு செய்யும் போது, அவர் செய்யும் முதலீட்டுத் தொகை மிகப் பெரிய தொகையாக இருக்க வாய்ப்புகள் குறைவு. எனவே நல்ல லாபம் தர வாய்ப்புள்ள, நம்பகமான கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கும்போது, அதில் தேவையான அளவு எண்ணிக்கையில் வாங்க முடியாமல் போகலாம். ஆனால், பல சிறு முதலீட்டாளர்களின் பணம் ஒரே இடத்தில் திரட்டப்பட்டு, அது ஒரு பெரும் தொகையாக மாறும் போது, அதைக் கொண்டு விரும்பிய எண்ணிக்கையில் பங்கு வாங்க முடியும்.

இன்னொரு பக்கம்_ இப்படி நிறைய பங்குகள் வாங்கி, அதை நிபுணர்கள் கொண்டு நிர்வகிக்கும்போது, அதற்கான நிர்வாகச் செலவுகளையும் பலரும் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் மியூச்சுவல் ஃபண்ட்களில் தனி நபருக்கான செலவு குறைகிறது.

இப்படியாக பலர் ஒன்றாக சேர்ந்து முதலீடு செய்து அதிக லாபம் பெறவும், ரிஸ்கைக் குறைத்துக் கொள்ளவும் பரஸ்பரம் உதவிக் கொள்வதால்தான் இந்த திட்டத்தை தமிழில் ''பரஸ்பர நிதி திட்டம்'' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அத்துடன், ஒரு தனிநபர் தனது சேமிப்புப் பணத்தை எங்கே லாபகரமாக முதலீடு செய்யலாம் என்பது குறித்த ஆராய்ச்சிக்காக செலவழிக்கும் நேரம், உழைப்பு போன்றவை இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மிகக்குறைவுதான். இதுபோக அனுபவம் உள்ள நிபுணர்களின் கண்காணிப்பும், பராமரிப்பும் நமது பணத்துக்கு கிடைக்கிறது என்பது கூடுதல் அனுகூலம். அதோடு இந்த நிபுணர்களுக்கு என நாம் மிகப் பெரும் தொகை எதையும் கூட செலவழிக்க தேவையில்லை.

இப்படி பல அணுகூலங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் உண்டு. அத்துடன் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல வகைகளும் உண்டு. அதனால், 'பங்குகளில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கே எனக்கு தேவையில்லை' என நினைப்பவர்கள் பங்குகள் சாராத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் வழிகள் உண்டு. அரசுக் கடன் பத்திரங்கள், பிறவகையான கடன் திட்டங்கள் என ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் நிறையவே இருக்கின்றன.

இன்றைக்கு இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு மாறுதல்களுக்குள்ளாகி, நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளது. இதனால் மற்ற பல வகையான முதலீடுகளை ஒப்பிடும்போது இந்த வகையான முதலீடுகளில் நிறைய அனுகூலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவை:

1. நுட்பம் தெரிந்த திறமையாளர்களின் நிர்வாகம்.

2. ஒரே இடத்தில், திசையில் முடங்கிப் போகாமல், பல வழிகளில், துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

3. கண்காணிப்பதும், நிர்வகிப்பதும் எளிது, குறைந்த நேரம் செலவிட்டால் போதும்.

4. அதிக லாபத்துக்கான வாய்ப்பு.

5. குறைந்த நிர்வாகச் செலவு.

6. நினைத்தபோது மீண்டும் காசாக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

7 திரட்டிய தொகை எங்கே முதலிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மை.

8 விரும்பியபோது ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறிக்கொள்ளும் எளிய வாய்ப்பு.

9. தேர்ந்தெடுக்க ஏராளமான திட்டங்கள்.

10. ஏராளமான வரிச்சலுகைகள்.

11. அதிக நம்பத்தன்மை (செபி போன்ற அமைப்புகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால்).

நன்றி: குமுதம்.காம்

No comments: