நன்றி: நாணயம் விகடன்
அட இவ்வளவுதானா! பேங்க்கில் போடுவதை விட அதிக லாபம், ஷேர் மார்க்கெட்டில் போடுவதை விட குறைவான ரிஸ்க் என்பதால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் ஃபண்டில் பணம் போட விருப்பம் இருந்தும் எப்படிப் போடுவது என்பது தெரியாமல் கைபிசைந்து நிற்பவர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கிறது.
போஸ்ட் ஆபீஸில் போய் சேமிப்புக் கணக்கில் பணம் போடுவதைப் போலத்தான் மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவதும். இன்னும் சொல்லப்போனால், அஞ்சலக சேமிப்பு என்றால், நாம் தேடிப் போகவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு ஆட்கள் நம்மைத் தேடி வருவார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அடிப்படை தகவல் களோடுதான் அந்த முதலீட்டுக்கு தயாராகி இருப்பீர்கள். அதனால், நாம் நேரடியாக அடுத்தகட்டத்துக்குப் போய்விடலாம்.
எந்த வகையான முதலீடு என்றாலும் பான்கார்டு முக்கியம். அதனால் பான்கார்டு குறித்த விவரங் களோடு மியூச்சுவல் ஃபண்டுக்காகவே உள்ள ஏஜென்டைத் தொடர்புகொள்ள வேண்டும். பெரும் பாலும் பங்குத் தரகர்களே மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென் டாகவும் இருப்பார்கள். பான்கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்ப நகலை வைத்து, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இறங்கிவிடலாம். கார்டு வந்ததும், அதன் எண்ணை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குச் சொன்னால் போதும்.
ஏற்கெனவே சந்தையில் இயங்கிவரும் திட் டங்கள் என்றாலும் புதிய வெளியீடுகளாக இருந் தாலும் பத்திரிகை, டி.வி. மூலம் அறிந்துகொள்ளலாம். அதை வைத்து எதில் முதலீடு செய்வது என்று முடிவு செய்திருப்பீர்கள். அடுத்தகட்டமாக ஏஜென்ட் அல்லது விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் உங்கள் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், பணத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்ய உதவுவார்கள்.
ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் விதவிதமான திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு ஏற்றது குறுகியகால முதலீடா? அல்லது நீண்டகால முதலீடா? தொடர்ந்து வருமானம் வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தேவையா? எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியும் போன்ற வற்றைக் கவனித்து அதற்கு ஏற்ப திட்டங்களைத் தேர்வு செய்யுங்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வழங்கு பத்திரம் (Offer Document) மிக முக்கியமானது. அதில் பல பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதனை முழுமையாகப் படித்துப் பார்ப்பது நல்லது. அதில் திட்டத்தின் தன்மை, ரிஸ்க் காரணிகள், திட்டத்துக்கான செலவு விவரங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை நடத்தும் நிறுவனத்தின் முந்தைய செயல்பாடுகள், ஃபண்ட் மேனேஜரின் கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம், மியூச்சுவல் ஃபண்ட நிறுவனத்தின் இதர திட்டங்களின் செயல்பாடுகள், நிறுவனத்தின் மீது நிலுவையிலுள்ள வழக்குகள், விதிக்கப்பட்ட அபராதம் போன்றவை இடம் பெற்றிருக்கும். வழங்கு பத்திரத்தின் ஒரு பகுதியாக விண்ணப்பப் படிவம் இருக்கும். அதில் முதலீட்டாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, பான் கார்டு எண் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். இதனைத் தெளிவாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, நாமினி நியமனம்.
திட்டத் தேர்வு முடிந்ததும், ஒரே நேரத்தில் மொத்த முதலீடா அல்லது மாதம் தோறும் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யப்போகிறீர்களா என்பதை முடிவு செய்யுங்கள். காசோலை அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். எனவே, அதற்கான முன் ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.
காசோலை அல்லது டிராஃப்டின் பின்புறம் உங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுப்பது நல்லது. எஸ்.ஐ.பி. முறை என்றால் முதல் மாதத்துக்கு மட்டும் காசோலை கொடுத்தால் போதும். அடுத்தடுத்த மாதங்களில், குறிப்பிட்ட தேதியில் இ.சி.எஸ். முறையில் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். ஏற்கெனவே இயங்கி வரும் திட்டம் என்றால் முதலீடு செய்த 3 அல்லது 4 நாட்களில் யூனிட்கள் ஒதுக்கப்பட்ட விவரம், அக்கவுன்ட் ஸ்டேட்மென்டாக தபாலில் அனுப்பி வைக்கப்படும். இ-மெயில் மூலமும் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
என்.எஃப்.ஓ. என்றால் அது நிறைவு பெற்ற 30-40 நாட்களுக்குள் யூனிட்கள் ஒதுக்கப்பட்ட விவரம் வரும். இந்த ஸ்டேட்மென்ட் வந்ததும் அதில் முதலீட்டு தொகை, உங்களின் பெயர், திட்டத்தின் பெயர், வாரிசு நியமனம் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏதாவது விவரங்கள், தவறுதலாக இடம் பெற்றிருந்தால், மியூச்சுவல் நிறுவனத்தின் கிளை, அல்லது அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் எழுத்து மூலம் தெரிவித்து சரிசெய்து கொள்ள வேண்டும்.
உங்களின் முழு முதலீட்டுத் தொகைக்கும் யூனிட்கள் ஒதுக்கீடு செய்யமாட்டார்கள். நுழைவுக் கட்டணம் (Entry Load) 2.5% முதலீட்டுத் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். உதாரணத்துக்கு ஒருவர், என்.எஃப்.ஓ-வில் (10 ரூபாய் முக மதிப்பு, 2.5% நுழைவுக் கட்டணம்) ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அவருக்கு 10 ஆயிரம் யூனிட்களுக்கு பதில் 9,750 யூனிட்கள்தான் கிடைக்கும்.
உங்களின் யூனிட்களின் வளர்ச்சியை முதலீட்டு இதழ்கள், ஆம்ஃபியின் இணைய தளம் போன்றவற்றில் கவனித்து வருவது அவசியம். நீங்கள் எதிர்பார்த்த ரிட்டர்ன் கிடைத்ததும் யூனிட்ளை விற்றுவிடலாம் அல்லது விரும்பினால் முதலீட்டைத் தொடரலாம்.
அக்கவுன்ட் ஸ்டேட்மென்டின் கீழ் பகுதியில், கூடுதலாக யூனிட்கள் வாங்க, யூனிட்களை விற்றுப் பணம் பெற, வங்கி கணக்கு மற்றும், முகவரி மாற்றத்தை தெரிவிக்க ஸ்லிப்கள் (Slips) இருக்கும். அதை நிரப்பி யூனிட்களை விற்கலாம். யூனிட்டின் என்.ஏ.வி. மதிப்பின் அடிப்படையில் பணம் தரப்படும். இதற்கான காசோலையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் சில தினங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தபாலிலும் பெறமுடியும். அத்தொகையை உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வசதியும் இருக்கிறது. வெளியேறும் கட்டணம் இருக்கும்பட்சத்தில் அது கழிக்கப்பட்டு மீதித் தொகை தரப்படும்.
டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வழங்கப்படும். அத் தொகைக்கு வரி எதுவும் கிடையாது. இதை முதலீட் டாளர் விரும்பும் விதத்தில் காசோலை அல்லது இ.சி.எஸ். முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
இனி ஏன் தயக்கம், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியதுதானே?
- எஸ்.ரம்யசினேகா, நன்றி: நாணயம் விகடன்
Saturday, October 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment