நன்றி: குமுதம்.காம்
குரோத் ஸ்கீம்ஸ்
இந்தவகைத் திட்டம், முதலீடு செய்யப்படும் பணத்தின் வளர்ச்சியை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டது. இதனால் இதை வளர்ச்சித் திட்டம் என்கிறார்கள். இவ்வகைத் திட்டங்களில் திரட்டப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குகளில் அல்லது அது சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் முதலீடு நடுத்தர மற்றும் நீண்ட கால நோக்கில் நல்ல வளர்ச்சியைக் காட்ட வேண்டும்; சிறப்பான லாபத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதால், இடையில் சிலகாலம் இந்தத் யூனிட்களின் மதிப்பில் சற்றே வீழ்ச்சி இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், இந்த வகைத் திட்டத்தின் நீண்ட கால சராசரி வருவாய் பொதுவாக மற்ற எல்லா திட்டங்களின் வருவாயைவிட அதிகமாக இருக்கும். சிறப்பாகச் செயல்பட்ட இந்த வகைத் திட்டங்கள் சில, ஒரே ஆண்டில் 100 சதவிகித வளர்ச்சியைக் காட்டியதும் உண்டு. அதாவது, ஓராண்டில் இந்த திட்டத்தில் போட்ட முதலீடு இரட்டிப்பாகியுள்ளது. எனினும், இந்த மாதிரி திட்டங்களில் 'ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாகத் தர வேண்டும்' என்பதெல்லாம் சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற எதிர்பார்ப்பு உள்ள தரப்பினருக்கு இந்தத் திட்டம் ஏற்றதன்று. நீண்ட கால முதலீடாக நல்ல வருவாயைத் தருவதாக இருந்தால் போதும் என்ற மனப்போக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருத்தமான திட்டம். குறிப்பாக, இளம் மற்றும் நடுத்தர வயதில் சேமிப்பவர்கள் இந்த வகைத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வகைத் திட்டங்களில் பெரும்பாலானவை தங்களது கையிருப்பில் பெரும் பகுதியை பங்குகளில் முதலீடு செய்வதால், இவற்றை பங்கு சார்ந்த திட்டங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். புரிந்து கொள்ள எளிதாக இருப்பதால், இனிவரும் பகுதிகளில் இதை பங்கு சார்ந்த திட்டங்கள் என்றே குறிப்பிடுவோம். பங்குச்சந்தை சிறப்பாகச் செயல்படும் "பூம் டைம்" அல்லது "புல் மார்க்கெட்' காலங்களில் இது சிறப்பான வருவாயைத்தந்தாலும், 'லீன்பிரியட்'அல்லது 'பியர்மார்க்கெட்'
எனப்படும் பங்குச்சந்தை சுணக்கத்தில் இருக்கும் காலங்களில் இது போட்ட முதலுக்கு மோசம் உண்டாக்கும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, 2006ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் மிகச் சிறப்பாக இருந்த இந்த வகை திட்ட முதலீடுகள், அந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் பங்குச்சந்தை கண்ட சரிவுக்கு பிறகு கடும் வீழ்ச்சியைக் கண்டு முதலீட்டாளர்களுக்கு வருவாய் இழப்பைக் காட்டின.
இன்கம் ஸ்கீம்ஸ் எனப்படும் வருவாய்த் திட்டம்
இந்த வகைத் திட்டம், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், இந்தத் திட்டத்திலிருந்து ஒரு தொகையை, வருமானமாக முதலீட்டாளருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.
இந்த கட்டாயத்தினால், இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையின் பெருமளவு_உறுதியான வருமானம் தரும் திட்டங்களான அரசு கடன் பத்திரங்கள், பாண்ட்கள் மற்றும் கம்பெனிகளின் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. இதுபோன்ற வகைகயிலான வட்டி வருமானம், பொதுவாக குறைவாகத்தான் இருக்கும் என்பதால், இந்தத் திட்டங்களின் வருவாயும் பொதுவாக குறைவாகத்தான் இருக்கும். ஆனால் வங்கிகளில் சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டி வருவாய் மற்றும் வைப்புநிதிக் கணக்கு எனப்படும் ஃபிக்ஸ்ட் டெப்பாசிட்களில் கிடைக்கும் வட்டி வருமானத்தைவிட இதில் கூடுதலான வருவாய் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அத்துடன் இதன் வருவாய், பொதுவாக நாட்டில் நிலவும் நிதி புழக்கம் மற்றும் வட்டி நிலவரத்தைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். பங்குச் சந்தை முதலீடுகளில் இருக்கும் அநிச்சயதன்மையை விரும்பாதவர்கள், பணி ஓய்வு பெற்று, அப்போது கிடைத்த பணத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட நினைக்கும் வயதானவர்கள் போன்ற தரப்பினருக்கு இந்த வகைத் திட்டம் பொறுத்தமானது. நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் வந்து, உலக மயமாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டபின், இந்த வகை திட்டங்களின் வருவாய் இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமின்றி, உலக பொருளாதாரத்தையும் சேர்ந்ததாக மாறிவிட்டது. 1990களின் ஆரம்ப நாட்களில் இருந்த வட்டி விகிதம் மெள்ள மெள்ள குறைந்து இப்போது ஒற்றை இலக்க வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், ஒரு கட்டத்தில் 20 30 சதவிகிதம் கூட வருவாய் தந்த இந்த வகைத் திட்டங்கள் தற்போது 15 சதவிகித வருவாய் தருவதே மிகப் பெரிய விஷயமாக மாறியுள்ளது.
பேலன்ஸ்டு ஸ்கீம்ஸ் எனப்படும் சமனத் திட்டம்.
இந்த வகைத் திட்டங்கள், மேலே சொன்ன இரண்டு வகைத் திட்டங்களின் கலப்பு திருமணத்தில் உருவானது என்று சொல்லலாம்.
அதாவது, முதலீட்டின் மீதான நீண்ட கால வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவாய் தரும் அம்சமும் முக்கியம்தான் எனக் கருதும் திட்டம் இது. அதனால் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையில் ஒரு பகுதி பங்குகளிலும், மீதி கடன் பத்திரங்கள், பாண்ட்கள் போன்ற நிரந்தர வருவாய் தரும் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். பொதுவாக, தனது முதலீட்டின் மீது ரிஸ்க் எடுக்க தயக்கம் உள்ள, ஆனால் முதலீட்டின் மீதான வளர்ச்சியும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்களுக்குப் பொறுத்தமான திட்டம் இது. இந்தத் திட்டங்களின் வளர்ச்சி அல்லது வருவாய் இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்ட மொத்த தொகையில் எத்தனை சதவிகிதம், எந்த மாதிரி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அமையும்.
லிக்விட் ஸ்கீம்ஸ் எனப்படும் உடனடித் திட்டம்.
இந்த வகைத் திட்டங்களை ஒரு குறுகிய கால சேமிப்பு வாய்ப்பு என்றே சொல்லலாம். அதாவது, அவசர தேவையின்போது உடனடியாக பணத்தை வெளியே எடுக்கும் வசதியும் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், விரும்பிய எந்த நேரத்திலும் முதலீடு செய்யும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. இதில் திரட்டப்படும் தொகை பெரும்பாலும் 'கால் மணி மார்க்கெட்' எனப்படும் குறுகிய கால வட்டிக்கு பணம் வழங்கும் ஏலச் சந்தையிலும், 'ட்ரஷ்ரி பில்ஸ்' எனப்படும் அரசுக் கருவூலம் சார்ந்த வகையிலும், இதையொத்த இன்னும் சில திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும். அதனால் இந்த வகை திட்டங்களில், ரிஸ்க் மிக மிகக் குறைவு. பொதுவாக, இந்தத் திட்டங்கள் கம்பெனிகள் தங்கள் கைவசம் உள்ள பணத்தை குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யவும், தனிப்பட்ட சிறு முதலீட்டாளர்கள் தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக பொறுத்தமான திட்டத்துக்குக் காத்திருக்கும் காலத்திலும் முதலீடு செய்ய ஏற்றது. இதனால் பொதுவாக இந்த வகை முதலீடுகளில் கிடைக்கும் வருமானம் மிக மிக குறைவாகத்தான் இருக்கும். எனினும் சிறுசேமிப்புக் கணக்குகளில் பணத்தைப் போட்டு வைத்திருந்தால் கிடைப்பதைவிட இதில் கிடைக்கும் வருவாய் அதிகமாக இருக்கும். அத்துடன் கம்பெனிகள் தங்கள் பணத்தை கரண்ட் அக்கவுண்ட் எனப்படும் நடப்பு கணக்குகளில் போட்டு வைக்கும்போது கிடைக்க வாய்ப்பில்லாத வட்டி இந்த திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளால் சாத்தியமாகிறது
டேக்ஸ் சேவிங் ஸ்கீம்ஸ் எனப்படும் வரி சேமிப்பு திட்டம்
இந்த வகைத் திட்டங்கள் ஈ.எல்.எஸ்.எஸ். என்ற பெயரில், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
'ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்' என்னும் இந்த வகைத் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டை பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை திரும்பப் பெற இயலாது. அத்துடன் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையில் பெரும் பகுதி பங்குகளில், அல்லது அதைச் சார்ந்த டெரிவேட்டீவ்ஸ் போன்ற மற்றவகைத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் வருமானவரி விதிப்புக் கொள்கைகளின்படி இதில் முதலீடு செய்யப்படும் தொகை முழுமையாக வருமான வரி விலக்கு பெறும். அதிகபட்சமாக, 1 லட்ச ரூபாய் வரை இப்படியான சலுகை பெற வாய்ப்புகள் உண்டு.
டேக்ஸ் சேவிங் ஸ்கீம்ஸ் எனப்படும் வரி சேமிப்பு திட்டம்
இந்த வகைத் திட்டங்கள் ஈ.எல்.எஸ்.எஸ். என்ற பெயரில், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
'ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்' என்னும் இந்த வகைத் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டை பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை திரும்பப் பெற இயலாது. அத்துடன் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகையில் பெரும் பகுதி பங்குகளில், அல்லது அதைச் சார்ந்த டெரிவேட்டீவ்ஸ் போன்ற மற்றவகைத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். தற்போது நடைமுறையில் இருக்கும் வருமானவரி விதிப்புக் கொள்கைகளின்படி இதில் முதலீடு செய்யப்படும் தொகை முழுமையாக வருமான வரி விலக்கு பெறும். அதிகபட்சமாக, 1 லட்ச ரூபாய் வரை இப்படியான சலுகை பெற வாய்ப்புகள் உண்டு.
ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டு முதலீடு திட்டம்
இந்த வகைத் திட்டங்கள் இந்தியாவைப் பொறுத்தவரை லேட்டஸ்ட் வரவு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகை, இந்தியாவில் இல்லாமல் _ சர்வதேச சந்தையில்... மற்ற நாடுகளின் பங்குச் சந்தையில் விற்பனையாகும் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.
கடந்த ஆண்டுக்கு முன்வரை இதில் ஒரு வரம்பும் இருந்தது. அதாவது இந்திய நிறுவனங்களில் குறைந்தது 10 சதவிகிதமாவது பங்கு வைத்திருக்கும் சர்வதேச பங்குகளில், அதிகபட்சமாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. 'இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகமில்லை' போன்ற சில காரணங்களால் இந்தக் கட்டுப்பாடுகள் அப்போது விதிக்கப்பட்டிருந்தன. பிரின்சிபல் குளோபல் ஆப்பர்ச்சுனிட்டீஸ் ஃபண்ட் என்ற திட்டம்தான் இந்தியாவில் தொடங்கிய இவ்வகையைச் சேர்ந்த முதல் திட்டம். ஆனால், கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் இதற்கான வரம்புகளை தளர்த்திவிட்டார். எனவே 'பிரின்சிபல்' திட்டமும் தற்போது புதிய வரம்புகளுக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பன்னாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான இது, தனது தாய் நிறுவனத்தின் திட்டமான பிரின்பசிபல் குளோபல் இன்வெஸ்டர்ஸ் எமர்ஜிங் மார்க்கெட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டது. மற்ற பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், இந்த வகையான புதிய திட்டங்களைத் தொடங்கும் திட்டத்தில் உள்ளன. இந்திய நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க்கை, மற்ற நாட்டு பங்குகளிலும் முதலீடு செய்வதன் மூலம் குறைத்துக் கொள்ள விரும்புவர்களுக்கு ஏற்ற திட்டம் இது.
இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் எனப்படும் பங்குச் சந்தை குறியீட்டெண் சார்ந்த திட்டம்
இந்த வகை ஃபண்ட்கள் பங்குச்சந்தை குறியீட்டெண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி போன்ற எதாவது ஒருவகை குறியீட்டெண்ணைச் சார்ந்த திட்டங்கள் எனலாம். அதாவது, சென்செக்ஸ் எனப்படும் குறியீட்டெண்ணை கணக்கிட பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் 30 பங்குகளில் மட்டும், அந்த பங்குகளுக்குத் தரப்படும் அதே முக்கியத்துவத்தின்படி முதலிடப்படும் திட்டம் சென்செக்ஸ் ஃபண்ட் எனப்படும்.
அதேபோல, நிப்டி எனப்படும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் கணக்கிட பரிசீலிக்கப்படும் 50 பங்குகளில் மட்டும் அதே விகிதத்தில் முதலீடு செய்யும் ஃபண்டை நிப்டி ஃபண்ட் எனலாம். இதுபோல நடைமுறையில் இருக்கும் பலவிதமான குறியீட்டெண்கள் அடிப்படையிலும் புதுப்புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வருகின்றன. இதன் சாதக அம்சம் அந்தந்த குறியீட்டெண்ணின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தத் திட்ட முதலீடும் வளரும் அல்லது வீழும் வாய்ப்புகள் இருப்பதுதான். அதனால் பங்குச்சந்தை பற்றி, அதன் சிக்கலான உள்ளடக்கம் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இந்த மாதிரி பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். பொதுவாக, எந்த குறியீட்டெண் கணக்கிடுவதானாலும், அதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பங்குகள் சம்பந்தப்பட்ட துறையின் முன்னணி பங்காகத்தான் இருக்கும் என்பதால் தவறான, அல்லது மோசமான பங்குகளில் நமது பணம் முடங்கிவிடுமோ என்ற சந்தேகம் கொள்ளத் தேவை இருக்காது.
'கில்ட் ஃபண்ட்ஸ்' எனப்படும் அரசுப் பத்திரங்களில் முதலிடும் திட்டம்.
நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையிலான அரசுப் பத்திரங்களில் பெருமளவும், தேவைப்பட்டால் சிறு அளவில் நம்பகமான சில கம்பெனிகளின் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யும் திட்டம் 'கில்ட் ஃபண்ட்' எனப்படுகிறது.
'கில்ட்' என்ற இந்தச் சொல்_இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்தது. இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பானது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், இதில் கிடைக்கும் வருவாய் பொதுவாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்து நடப்பில் இருக்கும் வட்டி விகிதத்தையொட்டியே இருக்கும். பங்கு சார்ந்த திட்டங்களில் கிடைப்பது போல, இதில், பெரிய அளவில் ரிடர்ன் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் இதில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு பாதுகாப்பு, மற்ற எந்தத் திட்டங்களை விடவும் அதிகம். அதனால், பொது நல காரியங்களில் ஈடுபடும் ட்ரஸ்ட்கள், பிற சங்கங்கள் உட்பட முதலுக்கான பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக நினைக்கும் தனி நபர்களும் இதில் முதலீடு செய்யலாம்.
நன்றி: குமுதம்.காம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment