நன்றி: குமுதம்.காம்
இன்றைய தேதியில் படித்து முடித்த இளைஞர்கள் பலரும், கை நிறையச் சம்பாதிப்பது உற்சாகம் தரும் உண்மை. நிறையச் சம்பாதித்தால் மட்டும் போதுமா? நமக்குக் கிடைக்கும் வருமானத்தில் பத்து முதல் இருபது சதவிகித பணத்தைச் சேமித்து வைக்க வேண்டாமா?
''சேமிப்பின் அவசியம் பற்றியும், சேமித்த பணத்தை எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பது குறித்தும் மிகச் சில இளைஞர்களே தெரிந்து வைத்திருக்கிறார்கள். டி.வி.டி, ஐபாட், கேமிரா, செல்போன் என்று தேவைப்படுகிறதோ, இல்லையோ ஏதாவது ஒரு பொருளை மாதம் ஒன்று வாங்குகிறார்கள் இளைஞர்கள். கேட்டால், கிரிடிட் கார்டு இருக்க பயமேன்? என்கிறார்கள். அவசியமான பொருளை மட்டும் பணம் கொடுத்து வாங்கி, மீதமுள்ள பணத்தை நல்ல திட்டங்களில் முதலீடு செய்தால், பிற்காலத்தில் மிகவும் பயன்படும்'' என்கிறார் நிதி நிர்வாக ஆலோசகரான பாலகிருஷ்ணன்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள், மாதாமாதம் சேமிக்கும் பணத்தை எந்தெந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று சொல்கிறார் அவர்.
''முதலீடு செய்வதில் ஒவ்வொரு வயதுக்காரர்களுக்கும் ஒரு ஃபார்முலா உண்டு.
25 வயது 40 வயதுக்காரர்கள் ஒரு வகை; 40 முதல் 60 வயதுக்காரர்கள் இன்னொரு வகை; 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றொரு வகை எனச் சம்பாதிக்கிறவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
இனி, முதல் வகையினரைப் பார்ப்போம். எதைப் பார்த்தாலும், 'வாடா மச்சான், ஒரு கை பார்த்துரலாம்' என்று மார்தட்டும் காலம் இது. உடம்பில் நிறைய பலம் இருக்கிறது. வயதும் இருக்கிறது என்பதால், எந்த 'ரிஸ்க்'கையும் எடுக்கக்கூடிய தைரியம் இவர்களிடம் உண்டு. எனவே, கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை; நிறைய லாபம் பார்க்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இந்த வயதுக்காரர்கள் இருப்பார்கள்.
இவர்கள் தாங்கள் சேமித்து வைத்த பணத்தில் ஐம்பது சதவிகிதத்தை மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து, மியூச்சுவல் ஃபண்ட்டின் வளர்ச்சியும் இருக்கும். தனிப்பட்ட முறையில் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைவிட மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வது நல்லது. மியூச்சுவல் ஃபண்ட்டில் நாம் முதலீடு செய்யும் பணம் அதிகபட்சமாக முப்பது சதவிகிதம் வரை நஷ்டமடைய வாய்ப்புண்டு. என்றாலும், 60 முதல் 70 சதவிகிதம் லாபம் தரக்கூடியது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் மியூச்சுவல் ஃபண்ட்டில் பணத்தைப் போட்டு வைத்திருந்தால் நாம் போட்ட பணம் இரண்டு மடங்காகப் பெருகும் வாய்ப்பும் உண்டு.
அடுத்து, இருபது சதவிகித பணத்தை வருமான வரி விலக்களிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஒன்று, வரி கட்டுவதிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். இரண்டாவது, ஆறு ஆண்டுகளுக்குள் அறுபது சதவிகிதம் பணம் பெருகும். உதாரணமாக, பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் என்.எஸ்.சி.யில் போட்டு வைத்தால், ஆறே வருஷத்தில் பதினாறாயிரமாக மாறிவிடும்.
ஆறு வருஷம் காத்திருக்க விருப்பமில்லாதவர்கள் இ.எல்.எஸ்.எஸ் என்கிற திட்டத்தில் மாதாமாதம் ஆயிரம் ரூபாயோ, இரண்டாயிரம் ரூபாயோ போடலாம். மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் கணிசமான லாபத்தைத் தரும்.
மூன்றாவதாக, உங்கள் சேமிப்பில் பதினைந்து சதவிகிதத்தை இன்ஷூரன்ஸ் செய்யுங்கள். பிற்காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க இன்ஷூரன்ஸ் செய்வது அவசியத்திலும் அவசியம். பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும் எண்டோமென்ட் திட்டம் அல்லது ஐந்து, பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பணம் கிடைக்கும் மணிபேக் பாலிசி என்று ஏதாவது ஒரு திட்டத்தில் பணம் போடலாம்.
அடுத்து, ஒரு ஐந்து சதவிகித பணத்தை 'மெடிகிளைம்' பாலிசியில் போடலாம். இப்போதெல்லாம் சர்க்கரை நோயில் ஆரம்பித்து ஹார்ட் அட்டாக் வரையிலான பல வித நோய்கள் வருகின்றன. இந்த நோய்களுக்கான சிகிச்சை செலவை 'மெடிகிளைம்' பாலிசியிலிருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். நமக்குப் போய் எதுவும் வரவில்லை என்றால் நாம் கட்டிய பணம் கிடைக்காது. ஆனால் மெடிகிளாமில் சில ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் போதும் லட்ச ரூபாய் வரை செலவுகளைத் தவிர்க்கலாம்.
கடைசியாக, ஒரு பத்து சதவிகித பணத்தை பி.பி.எப். திட்டத்தில் முதலீடு செய்தால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அது மிகச் சிறந்த வருமானத்தைக் கொடுக்கும்.
நாற்பது முதல் அறுபது வயதுள்ளவர்கள் ரிட்டயர்ட்மெண்ட் நோக்கிச் செல்பவர்கள். மிக விரைவில் மாத வருமானத்தை இழக்கப் போகிறவர்கள் என்பதால், எந்த விதத்திலும் நஷ்டம் ஏற்படுத்தாத திட்டங்களில் மட்டும் முதலீடு செய்வது அவசியம்.
இந்த வயதில் இருப்பவர்கள் முப்பது சதவிகித பணத்தை மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் போடலாம். பத்து சதவிகித பணத்தை வரிச்சலுகை அளிக்கும் திட்டங்களிலும், இருபது சதவிகித பணத்தை ஆர்.டி. மற்றும் மாதாமாதம் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானிலும் போடலாம்.
இது தவிர, பத்து சதவிகித பணத்தை இன்ஷூரன்ஸிலும், பத்து சதவிகித பணத்தை பி.பி.எஃப். திட்டத்திலும் போடலாம். கடைசியில் மீதமிருக்கிற இருபது சதவிகித பணத்தை போஸ்ட் ஆபீஸிலோ அல்லது வங்கியிலோ ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டு வைக்கலாம். எதிர்பாராமல் செலவு ஏதும் வந்தால், இந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வைத்திருந்தால், கவர்ச்சியான வட்டியும் கிடைக்கும்.
அறுபது வயதுக்கு மேலே உள்ளவர்களில் பலர், எந்த வருமானமும் இல்லாதவர்களாகவே இருப்பார்கள். எனவே, இவர்களிடம் உள்ள பணம் ஒரு பைசாகூட இழக்காத படிக்கு முதலீடு இருக்க வேண்டும். எனவே, இந்த வயதுக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தில் எழுபது சதவிகிதத்தை, மாதாமாதம் வருமானம் தரக்கூடிய அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்து வைப்ப அவசியம்.
அடுத்து இருபது சதவிகிதத்தை வருமானவரிச் சலுகை அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ். போன்ற திட்டத்திலும், என்.எஸ்.சி. திட்டத்திலும் முதலீடு செய்யலாம். பத்தே பத்து சதவிகித பணத்தை மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் போடலாம்.
இது ஒரு பொதுவான ஃபார்முலாதான். நஷ்டத்தைக் குறைத்து, அதிக அளவில் லாபம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் எனில், விஷயம் தெரிந்த நிதி நிர்வாக ஆலோசகர்களுடன் கலந்தாலோசியுங்கள்'' என்கிறார் பாலகிருஷ்ணன்.
நிபுணர் யோசனை சொல்லிவிட்டார். இனி முதலீடு செய்ய வேண்டியது உங்கள் வேலைதான்.
நன்றி: குமுதம்.காம்
Saturday, October 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment