Saturday, October 20, 2007

பரஸ்பரநிதி - ஒரு எளிய அறிமுகம்

நன்றி: குமுதம்.காம்

தமிழ்நாட்டில் இப்போது ஷேர் மார்க்கெட்டுக்கு அடுத்து பிரபலமடைந்து வரும் விஷயம் மியூச்சுவல் ஃபண்ட். வங்கி டெபாசிட்டுகளில் நீங்கள் போடும் பணம் பத்திரமாக இருப்பது போல, மியூச்சுவல் ஃபண்டிலும் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பத்திரமாக இருக்கும். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் ஒரு லட்ச ரூபாய், இரண்டு லட்சமாக மாற்றிவிடும் வல்லமையும் மியூச்சுவல் ஃபண்ட்டுக்கு உண்டு.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரமான மியூச்சுவல் ஃபண்ட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படையான விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார் நிதி நிர்வாக ஆலோசகரான சுவாமிநாதன்.

''மியூச்சுவல் பண்ட் பற்றிப் புரிந்துகொள்வது மிக மிகச் சுலபம். தனிப்பட்ட முறையில் ஒருவர் பங்குச்சந்தையில் (ஷேர் மார்க்கெட்டில்) முதலீடு செய்வதைவிட, பலரிடமும் பணத்தை வாங்கி, நன்கு விஷயம் தெரிந்த ஒருவர் மூலமாக பங்குச் சந்தையிலும், மற்ற பல விஷயங்களிலும் முதலீடு செய்வதுதான் மியூச்சுவல் பண்ட்.

நீங்கள் கொடுக்கும் பணம் பெருமளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு 'ஈக்விட்டி ஃபண்ட்' (Equity fund) என்று பெயர். பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பெரிய நிறுவனங்கள் நடத்தும் கடன் பத்திரத்தை வாங்கினால் அதற்கு 'டெப்ட் ஃபண்ட்' (Debt fund) என்று பெயர்.

நீங்கள் வாங்கும் மியூச்சுவல் ஃபண்ட் இந்த இரண்டில் எதில் வரும் என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள். அல்லது அந்த மியூச்சுவல் ஃபண்ட் பற்றி அந்த கம்பெனி கொடுக்கும் கையேட்டில் தெளிவாக சொல்லியிருப்பார்கள்.

இந்த இரண்டு ஃபண்ட்டில் எது நல்லது என்று கேட்டால் பதில் சொல்வது மிக மிகக் கடினம். சில சமயம் 'ஈக்விட்டி ஃபண்ட்' நல்ல லாபம் தரும். அப்போது அதில் பணத்தைப் போடுவதுதான் சரி. இன்னும் சில நேரத்தில் பங்குச்சந்தை மோசமாக இருக்கும். அப்போது 'டெப்ட் ஃபண்ட்'டில் பணத்தைப் போடலாம்.

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யும் 'ஈக்விட்டி ஃபண்ட்'டை நீங்கள் வாங்குவதாக இருந்தால் மேலும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பங்குச்சந்தையில் பல ஆயிரம் பங்குகள் உண்டு. இதில் வங்கி சம்பந்தப்பட்ட பங்குகள், கட்டமைப்பு சம்பந்தப்பட்ட பங்குகள், தகவல் தொழில் சார்ந்த பங்குகள், மருந்து கம்பெனிகள் என்று துறை வாரியாகப் பார்த்து பணத்தை முதலீடு செய்வதை 'செக்டார் ஃபண்ட்' (Sector fund) என்று சொல்வார்கள். குறிப்பிட்ட ஒரு துறை சம்பந்தப்பட்ட பங்குகளை மட்டும் வாங்காமல் பல துறை சம்பந்தப்பட்ட பங்குகளை வாங்குவதை 'டைவர்சிஸிபட் ஃபண்ட்' (diversified fund) என்பார்கள்.

இந்த இரண்டில் எந்தப் பங்குகளை வாங்கலாம் என்பதற்கு ஒரு வரி விடை எதுவும் இல்லை. இரண்டிலும் சாதகமான, பாதகமான விஷயங்கள் உண்டு. நாம் நினைத்தபடியே மருந்துத்துறை நன்கு வளர்ச்சி அடைந்தால், நமக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். அப்படி இல்லாமல் மருந்துத்துறை படுத்துவிட்டால் நஷ்டம் ஏற்பட்டு, நீங்கள் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

டைவர்சிஸிபட் ஃபண்ட்டில் முதலீடு செய்தால் ஒரு கம்பெனி பங்கு படுத்தாலும் இன்னொரு கம்பெனி பங்கு திறமையாகச் செயல்பட்டு, நம் நஷ்டத்தைக் குறைக்கும். எனவே, ஓரளவுக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. நிறைய லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செக்டார் ஃபண்டையும், மற்றவர்கள் டைவர்சிபைட் ஃபண்டையும் வாங்கலாம்.

இந்த இரண்டைத் தவிர சமீபகாலமாக, மல்ட்டி கேப் என்கிற ஒன்றும் புதிதாக வந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட துறையின் பங்கை வாங்காமல் பெரிய, நடுத்திர, சிறிய என்று எல்லா கம்பெனிகளின் ஷேர்களையும் வாங்குவதற்கு 'மல்ட்டி கேப்' என்று பெயர். இப்போது 'மல்ட்டி கேப்'பும் மிக சிறந்த லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது.

இந்த விஷயங்களைக் கவனித்து முடித்தபிறகு, நீங்கள் வாங்கப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் ஓப்பன் எண்ட் ஸ்கீமா, அல்லது குளோஸ்ட் எண்ட் ஸ்கீமா என்பதைப் பாருங்கள். 'ஓப்பன் எண்ட் ஸ்கீம்' என்பது ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம். விற்கலாம். ஆனால் 'குளோஸ்ட் எண்ட் ஸ்கீம்' என்பது குறிப்பிட்ட ஒரு நேரத்தில்தான் அந்த ஃபண்ட்டை வாங்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் விற்க முடியும். மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் எனக்கு இந்த பணமே வேண்டாம் என்று நினைப்பவர்கள் குளோஸ்ட் எண்ட் ஸ்கீமில் தாராளமா பணத்தைப் போடலாம். எப்போது வேண்டுமானாலும் ஃபண்ட்டை விற்றுவிட்டு வெளியே வர நினைப்பவர்கள் ஓப்பன் எண்ட் ஸ்கீம் ஃபண்ட்டுகளை வாங்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும் முன்பு, இந்தத் துறையில் கற்றுத் தேர்ந்த ஒரு நிபுணரின் ஆலோசனையின் படி பணத்தை முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு கம்பெனியின் மியூச்சுவல் பண்ட் பற்றி நீங்களே தெரிந்துகொள்ள வேண்டும் எனில் அந்தந்த கம்பெனி நடத்தும் இணைய தளத்தில் போய்ப் பார்த்தால் உங்களுக்கு வேண்டிய எல்லாத் தகவல்களும் கிடைக்கும். உதாரணமாக, ரிலையன்ஸ் கம்பெனி நடத்தும் மியூச்சுவல் ஃபண்டுகளை நீங்கள் வாங்க ஆசைப்பட்டால், அந்தக் கம்பெனி நடத்தும் இணைய தளத்துக்குள் சென்று பாருங்கள். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் எவ்வளவு லாபம் தந்திருக்கிறது என்பதை அறிய வேண்டும் எனில் valueresearch.com என்கிற இணைய தளத்துக்குச் சென்று பாருங்கள்.

ஒரு முறை, ஒரே ஒரு முறை மியூச்சுவல் ஃபண்ட்டில் ஐந்தாயிரம் ரூபாயை முதலீடு செய்தால், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய அத்தனை விஷயங்களும் உங்களுக்கு அத்துப்படியாகிவிடும்'' என்கிறார் சுவாமிநாதன்.

பெஸ்ட் ஆஃப் லக்!

நன்றி: குமுதம்.காம்

No comments: