Saturday, October 20, 2007

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

நன்றி: குமுதம்.காம்

மியூச்சுவல் ஃபண்ட்களை அவற்றின் அமைப்பு, முதலீட்டு நோக்கம் என பல விஷயங்களைப் பொறுத்து பலவிதங்களாக பிரிக்கலாம். அதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

திட்டத்தின் அமைப்பைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்ட்களை 3 வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1. குளோஸ்ட் எண்டட் திட்டம், 2. ஓப்பன் எண்டட் திட்டம், 3. இன்ட்ரவல் திட்டம்.

1. குளோஸ்ட் எண்டட் திட்டம்:

இந்த வகைத் திட்டம் ஒரு குறிப்பிட்ட கால இலக்கு கொண்டது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், திட்டம் தொடங்கும் நேரத்தில் இதற்கென அனுமதிக்கும் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே இதற்கான தொகையைச் செலுத்தி யூனிட்களைப் பெற முடியும். பொதுவாக, இந்த வகைத் திட்டம் 2 ஆண்டு முதல் அதிகபட்சமாக 15 ஆண்டு வரைகூட காலக்கெடு கொண்டதாக இருக்கும். ஆனால், அந்த காலக் கெடு எவ்வளவு என்பது திட்டம் தொடங்கும்போதே அறிவிக்கப்படும். அந்தக் குறிப்பிட்ட கால எல்லை முடியும்போது, அந்த யூனிட்களை வழங்கிய நிறுவனமே, அன்று அந்த யூனிட்களுக்கு இருக்கும் மதிப்பில் அதைத் திரும்பப் பெற்று திட்டத்தை முடித்து வைக்கும். ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் திட்டத்தில் சேர விரும்பிய நபர் ஆரம்ப அனுமதி நாட்களில் தவறவிட்டு விட்டார் என்றால், இடையில் மீண்டும் இந்தத் திட்டத்தில் இணைய முடியாது. அதனால்தான் இதை 'குளோஸ்ட் எண்டட்' திட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

எனினும் ஆரம்பத்தில் தவறவிட்டவர்கள், பின்னர் இந்த யூனிட்களை பெற விரும்பினால், அதற்கும் சுற்று வழிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதற்கு சற்று அதிகமாக செலவிட வேண்டி வரலாம்.

இந்த வகை யூனிட்கள் கிட்டத்தட்ட பங்குகள் போலத்தான். அதனால் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, இவை பங்குச்சந்தையில் விற்பனைக்கு வரும். அப்போது சந்தையில் நிலவும் விலை கொடுத்து இதை வாங்கிக் கொள்ளலாம். பொதுவாக, சந்தையில் விற்பனையாகும் யூனிட்களின் விலை, அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கணக்கிட்டுச் சொல்லும் நிகர மதிப்பை ஒட்டி விற்பனையாகும். பங்குச் சந்தையில் ஒரு குறிப்பிட்ட பங்குக்கு இருக்கும் டிமாண்ட் சப்ளை இடைவெளி போலத்தான் இதுவும். என்ன விலைக்கு கிடைக்கிறது என்பது அன்றைய சூழலைப் பொறுத்தது. ஆனால், பொதுவாக இது அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிவிக்கும் நிகர சொத்து மதிப்பை விட சற்றே குறைவாக இருக்கும். ஆனால் அந்தத்திட்டத்தின் கால இலக்கு முடிவுறும் நாள் நெருங்க நெருங்க, இந்த இடைவெளி குறைந்து, கடைசி நாளில் ஒரே மதிப்பை எட்டும்.

ஆரம்ப நாட்களில் இதற்கு பங்கு பத்திரங்களைப் போல காகித வடிவச் சான்றிதழ்களை வழங்கி வந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் இதை டிமேட் வடிவில் கொடுக்கிறார்கள். அதனால் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் டிமேட் கணக்கு வைத்துக் கொள்கிறார்கள். புதிய பங்கு வெளியீட்டில் பங்குகள் வழங்கப்படுவது போலவே, இவர்களது டிமேட் கணக்கில் யூனிட்கள் வரவு வைக்கப்படுகின்றன.

2. ஓப்பன் எண்டட் திட்டம்:

இந்த வகைத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால இலக்கு எதுவும் இல்லை. இவற்றில் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர், தான் விரும்பிய எந்த நேரத்திலும் இந்தத் திட்டத்தில் இருந்து வெளியேற முடியும். அதாவது, அவர் வெளியேற நினைக்கும் நாளில் அந்தத் திட்டத்தின் யூனிட்களுக்கு என்ன மதிப்போ, அந்த மதிப்பில் _ யூனிட்டை வழங்கிய நிறுவனத்திடமே அதை விற்றுவிட்டு அதற்கான தொகையைப் பெற முடியும். திட்டம் தொடங்கும் ஆரம்ப நாட்களில் இவை இந்த திட்ட யூனிட்களின் முக மதிப்பில் கிடைக்கும். பொதுவாக, இது 10 ரூபாயாக இருக்கும். ஆனால் ஆரம்ப நாட்களில் இதில் முதலீடு செய்ய தவறிவிட்டு பின்னர் முதலீடு செய்பவர்கள், அப்போது அந்த திட்டத்தின் யூனிட்கள் என்ன மதிப்பில் இருக்கின்றனவோ அந்த மதிப்பின் படி பணம் கொடுத்து யூனிட்களை வாங்க வேண்டும். அதை அந்தத் திட்டத்தை வழங்கிய நிறுவனத்திடமிருந்தே வாங்கிக் கொள்ளலாம். இப்படி எப்போது வேண்டுமானாலும் அந்தத் திட்டத்தில் நுழையவோ, வெளியேறவோ வசதி கொண்ட திறந்த வகைத் திட்டம் என்பதால் இதை 'ஓப்பன் எண்டட்' திட்டம் என்கிறார்கள். பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்களின் பெருவாரியான திட்டங்கள் இந்த வகையினதாகத்தான் இருக்கின்றன. பெருவாரியான முதலீட்டாளர்களால் விரும்பப்படுவதால் பல நிறுவனங்களும் இவ்வகைத் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் இந்தத் திட்டங்களில் திரளும் பணத்தை முதலீடு செய்யும் நிபுணர்கள் விருப்பம் வேறு.

ஓப்பன் எண்டட் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு முதலீட்டாளர், பின்பு, தான் விரும்பிய எந்த நேரத்திலும் அந்தத் தொகையை திரும்பக் கேட்கும் வாய்ப்புண்டு. அதனால், இந்தத் திட்டத்தில் திரண்ட தொகையை முதலீடு செய்யும் நிபுணர் அதை நீண்ட கால திட்டங்களில் நம்பிக்கையுடன் முதலீடு செய்துவிட முடியாது. நித்ய கண்டம் பூர்ண ஆயுசு கதைதான்! பணம் கேட்டு எந்த நேரத்திலும் ஓலை வரலாம் என்பதை மனதில் இருத்தி, அதற்கேற்ப திட்டமிட்டுதான் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. அதிக லாபம் தரும் என்றாலும்கூட, நீண்ட கால திட்டம் என்றால் அதில் முதலீடு செய்ய இயலாத சிக்கல் இந்தத் திட்டத்தில் உண்டு. அதனால் இதில் கிடைக்கும் வருவாய் குறைவாக இருக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. மாறாக, குளோஸ்ட் எண்டட் திட்டங்களில் இத்தனை ஆண்டுகள், அல்லது மாதங்களுக்கு இந்தப் பணம் கேட்டு ஓலை வராது என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்பதால், அந்தக் கால இலக்குக்கு ஏற்ப திட்டமிட்டு நிபுணர்கள் முதலீடு செய்ய முடிகிறது. எனவே அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கைத் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய குளோஸ்ட் எண்டட் திட்ட முதலீடுதான் ஏற்றது என்கிறார்கள் நிபுணர்கள்.

3. இன்ட்ரவல் திட்டம்:

ஓப்பன் எண்டட், குளோஸ்ட் எண்டட் எனும் இரண்டு வகைத் திட்டத்தின் அம்சங்களும் இணைத்த திட்டம் இன்ட்ரவல் திட்டம்.

இந்தத் திட்டத்தின் யூனிட்கள் பங்குசந்தையில் பட்டியிலடப்பட்டு விற்பனைக்கு வரும். அதனால் சந்தை விலையில் எப்போதும் இதை வாங்க வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்து, இந்தத் திட்டம் தொடங்கியபோது அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே யூனிட்களை விற்பனைக்கு கொடுத்தது போல, பின்னாளில் மீண்டும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அந்தத் திட்டத்தின் யூனிட்களை விற்பனைக்கு தரும். அல்லது திரும்ப வாங்கிக் கொள்ளவும் செய்யும். இவ்வாறு எந்தெந்த காலத்தில் நிறுவனம் யூனிட்களை விற்கும் அல்லது வாங்கிக் கொள்ளும் என்பது தொடக்கத்திலேயே அறிவிக்கப்படும். அப்போது யூனிட்கள் அந்த நிறுவன கணக்குப்படியான மதிப்பில் விற்பனை செய்யலாம் அல்லது வாங்கலாம். அந்தக் குறிப்பிட்ட நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் அவை பங்குச்சந்தையில் விற்பனையாகும் நிலைக்குச் சென்றுவிடும். பொதுவாக, இந்த மாதிரியான திட்டங்கள் இந்தியாவில் வழக்கத்தில் இல்லை. ஆனால் பல முன்னேறிய நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன.

திட்டத்தின் நோக்கத்தைப் பொறுத்தும் மியூச்சுவல் ஃபண்ட்களை பல வகைகளாகப் பிரிக்கலாம். அவை

அ. குரோத் ஸ்கீம்ஸ் எனப்படும் வளர்ச்சித் திட்டங்கள்.

ஆ. இன்கம் ஸ்கீம்ஸ் எனப்படும் வருவாய்த் திட்டங்கள்.

இ. பேலன்ஸ்டு ஸ்கீம்ஸ் எனப்படும் சமனத் திட்டங்கள்.

ஈ. லிக்விட் ஸ்கீம்ஸ் எனப்படும் உடனடித் திட்டங்கள். (மணி மார்க்கெட் திட்டங்கள்)

உ. டேக்ஸ் சேவிங் ஸ்கீம்ஸ் எனப்படும் வரி சேமிப்புத் திட்டங்கள்.

ஊ. ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ் எனப்படும் வெளிநாட்டு முதலீடு திட்டங்கள்.

எ. இண்டெக்ஸ் ஃபண்ட்ஸ் எனப்படும் பங்குச்சந்தை குறியீட்டெண் சார்ந்த திட்டங்கள்

ஏ. கில்ட் ஃபண்ட்ஸ் எனப்படும் அரசுப் பத்திரங்களில் முதலிடும் திட்டங்கள்

ஐ. ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் எனப்படும் அதிரடி திட்டங்கள்

ஒ. ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்

ஓ. ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் மற்றும்

ஔ. ஸ்பெஷல் ஃபண்ட்ஸ் எனப்படும் சிறப்பு திட்டங்கள்.

நன்றி: குமுதம்.காம்

No comments: